எழுத்தாளர் தவசியின் கட்டுரை - புதுப்புனல் இதழில்!

கட்டுரை


எல்லை மீறும் விளம்பரங்களும்

சில கேள்விகளும்..

ம. தவசி








Ô யுத்தம் நடந்த காலை வேளையிலே நெப்போலியனோட மெமரி லாஸாகியிருந்ததா..?

புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த நியூட்டன் டயடா தூங்கியிருந்தா..?

பானிப்பட் போரில் அக்பருக்கு வயிறு கெட்டுப் போயிருந்தா..? என கூறிக் கொண்டிருக்கும் போதே இந்த வரலாற்று நாயர்களின் காலத்தில் குழந்தைகள் நடித்துக் காட்டும். கூடவே தாளமுடியாத சிரிப்பு. இப்படியான வித்தியாச சிந்தனைக்கு, மூளை வளர்ச்சிக்கு நீங்கள் Ôஇதை..Õ குடிங்க..

சுற்றிலும் போருக்கான ஆயத்தம் நடந்து கொண்டிருக்கும். மகாராணி வெற்றித் திலகம் இட, ஆரத்தி தட்டோடு வருவார். அப்போது பத்து தலை ராவணனின் முகத்தில் சலிப்பு; சோர்வு. மன்னா வெற்றி பெற வாழ்த்துக்கள் என பொட்டு வைக்க, இந்த தலைவலியைப் போக்க, ஒரு திலகம் இருக்கிறதா..? உடனே ரிஷிகள் எல்லாம் சேர்ந்து பழங்கால தாவரங்களை யாக குண்டத்தில் போட்டு ஒரு தைலம் தயாரிப்பார்கள். அதை கொண்டு வந்து கொடுக்க ராவணன் அவர், தலையில் பூசிக்கொள்ள பத்து தலைக்கும் ஒளி பரவி வலி நிவாரணம் கொடுக்கும்; பின் அவர் எங்கு போவார் தெரியுமா..? கையில் மட்டையுடன் கிரிக்கெட் போருக்கு.!

காட்டில் கழுதை, குரங்கை துரத்தும். பின் இரண்டும் ஓட இடையிலான வனத்தில் ஒரு மிட்டாய் கிடக்கும்; அதை கழுதை மோந்து பார்த்துவிட்டு செல்ல குரங்கு எடுத்து வாயில் போடும். அவ்வளவுதான்; அதற்கு போதி மரத்தடியில் கிடைத்த ஞானம் மாதிரி எல்லாம் கிடைத்துவிடும். அது அசைபோட்டு நடக்க குரங்கில் இருந்து கொரில்லா, சிப்பன்சியாக மாறி முதுகு நிமிர்ந்து, கல் உரசி தீயைக் கண்டு பிடித்து மனிதனாக மாறும். என்ன ஆச்சர்யம். பல ஆயிரம் கோடி ஆண்டுகள் வளர்ச்சி ஒரு மெண்டோஸில் கிடைத்து விட்டது. பின் அதே கழுதை வண்டியை இழுக்க மனிதன் உட்கார்ந்து சாட்¬டால் அடிப்பான். அப்பா அசூர வளர்ச்சி! பாவம் டார்வினுக்கு இது தெரியாமல் போய்விட்டது.

வனத்தில் ஒரு முயலை துரத்திக் கொண்டு காட்டுவாசிகள் ஓடுவார்கள், திடீரென மேல் இருந்து ஒரு பொருள் விழும். அதை திறந்து பார்க்க உலகம் வசப்படும், பின் அதே காட்டுவாசிகள் லேப்டாப் கொண்டு வணிகம் பேசுவார்கள். கடைசியில் அதே காட்டில் அவர்கள் அரைக்கால் டவுசருடன் மிகுந்த நவீனத்தில் பந்து தூக்கிப்போட்டு விளையாடுவார்கள். அடடா! காட்டுவாசிகள் அனைவருக்கும் ஒரு லேட்டாப் கொடுத்துவிட்டால் போதும் போலிருக்கே. அடிப்படை வசதிகளாவது; மண்ணாங்கட்டியாவது. எல்லாம் சுத்த வேஸ்ட். அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

இப்படியான விளம்பரத்தை நீங்கள் தினமும் தொலைக் காட்சிகளில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை பார்த்திருப்பீர்கள். அத்தோடு உங்கள் குழந்தைகளும். வரலாறு, புராணம் என்பதெல்லாம் நாம் படித்து புரிந்து கொண்ட விஷயங்கள் வேற. ஆனால் இங்கு அது காட்டப்படும், காட்சிப்படுத்தப்படும் முறைதான் நமக்கு உறுத்துகிறது. வரலாற்றை படித்தவர்களைப் பற்றி நமக்கு அக்கறையில்லை. ஆனால் வீடு வீட்டுக்கு இலவச டிவி கொடுத்து வேறு எந்த வேளையும் பார்க்காதீர்கள் நாங்கள் போடும் மொகா தொடரையும், சகட்டு மேனிக்கு போட்டுத் தாக்கும் பெண்களின் குத்தாட்டத்தையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருங்கள்..Õ என கொம்பு சுத்தி அடிக்கும் தொலைக்காட்சிகளை, வீட்டின் மிக முக்கிய உறுப்பினராக்கி உரையாடும் குழந்தைகளுக்கு எப்படி போகும்..? பள்ளி நேரம் போக மீதி நேரங்களில் டிவிகளை கட்டி அழும் குழந்தைகள் எப்படி புரிந்து கொள்ளும்.? அது புரிந்து கொள்ளும் நியூட்டன் விதி என்னவாக இருக்கும்..?

ராவணன் என்பது வெறும் கதை சம்பந்தப்பட்டதாகத்தான் நம்மிடம் இருக்கிறதா..? அப்படியானால் ராமாயணம், மகாபாரதம் எல்லாம்..?

Ô கட்டமைக்கப்பட்ட எந்தவொரு வார்த்தையுமே தனி அல்ல. அது பெருந்திரளின் வாழ்வோடு சம்பந்தப்பட்டது.. அது போல் புராண இதிகாசங்களும்..Õ இல்லையா..? இதையெல்லாம் யார் கேட்பது; எப்படி கட்டுப்படுத்துவது..?

பொருட்கள் விற்பனையாக எப்படி வேண்டுமானாலும் வரலாற்றை Ôகடி ஜோக்காகÕ மாற்றலாம் தானே?

ஆறுமாத தூக்கம், ஆறுமாதம் விழிக்கும் கும்ப கர்ணனை நமக்கு தெரியும். அதன் கண பரிமாணங்கள் பல்வேறு வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருப்பதும் யதார்த்தம். ஆனால் ஒரே ஒரு மிட்டாய் போட்டால் ஆறு மாதத்தை அறு நொடியாக்கிவிடலாம். ஆறுமாத குறியீடு; அறு நொடியாக்கப்பட்டு விடும். அப்படித்தானே..?

இப்படி வரலாறு, இதிகாசங்களை மட்டும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மறுவாசிப்பு செய்வதோடு..! நின்று விடவில்லை.

உலக சாதனை படைத்த பிரபல கிரிக்கெட் வீரர் காத்திருப்பார் கையில் பிஸ்கட்டுடன். அதை எடுத்துப் போக வேலைக்காரர் வருவார், உடனே அவர், Ô இருக்கட்டும் என் ப்ரண்ட் வருவார்..Õ என்பார். கடைசியில், Ôஅந்த நண்பர் நீங்களாகவும் இருக்கலாம்..Õ என முடியும்.

பாரம்பரிய வி¬ளாட்டுக்கள், ஆரோக்கியத்தின் சகலத்தையும் கொடுத்த நம் விளையாட்டுக்கள் யாவும் மறக்கடிக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டு சந்துக்கு சந்து கிரிக்கெட் பேட், குச்சியுடன் உலவிக் கொண்டிருக்கும் நம் சிறுவர்களுக்கு ஆதர்சனம் இந்த வீரர். இவரின் காத்திருப்பு நம்நாட்டில் உள்ள எல்லாருக்கும் பொது; அவருக்காய் நம் குழந்தைகள் காத்திருக்க வேண்டும் அதுவும் கையில் பிஸ்கட்டுடன். இதுபோல் நீங்கள்.. எப்போதும் சக்தியோடு, எனர்ச்சியாக இருக்க வேண்டுமா..? அப்போ ÔஇதைÕ குடிங்க.

பல லட்சம் ஏன் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இளம்புயலுக்கு இதெல்லாம் எதற்கு என்று கேட்காதீர்கள். உதை விழுகும். பாராளுமன்றத்தில் கண்டன கூட்டம் நிறைவேற்றப்படும். பேசாமல், பாரத ரத்னா விருதுக்கு நாமும் பரிந்துரைப்போம்.

இன்னொரு நடிகை வீட்டு காலிங் பெல்லை அழுத்துவார்; கதவு திறந்ததும், Ô உங்க டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா? என்பார், டூத்பேஸ்ட்டில் உப்பா.? ஆமா.. காட்டுங்க.. ஓ.. என எடுத்துக் காட்ட ஒரு பாக்கெட் இலவசம். நீங்கள் தயாரா இருங்க! அப்ப நாங்களும் உங்க வீட்டுக்கு வருவோம்.."

Ôஏம்மா.. இத வாங்கினா அவுங்க வருவாங்களாம்மா..?Õ இது குழந்தையின் கேள்வி. என்ன பதில் சொல்வீர்கள்?

மற்றொரு நடிகை இதுபோல் வருவார்; Ô நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.. இந்தாங்க.. உங்க வீட்டுக்கான புதுசாவி..Õ என மெகா சைஸ் சாவியைத் தருவார். Ô நீங்களும் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டாமா..? அப்படின்னா.. நீங்கள் செய்ய வேண்டியது..Õ என ஒரு விளம்பரம் செய்வார். சராசரியான இருப்பின் நிலையே கேள்விக்குறியாக உள்ள சூழலில், இவர்களின் வருகை வீட்டில் முக்கியமானது, விலை வாசி விண்ணைத்தொட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் வீடு என்பது மெகாலய கனவு. இல்லையா..? அது ஓசியில், பரிசில் கிடைத்தால், சும்மாவா.. மூட்டை முடிச்சுகளுடன் ஒரு பிரபல நகைச்சுவை நடிகர் கிளம்பி விட்டார்; நாமும் பின்னாடிதானே போகணும்?

பெண் உடலை மையமாக வைத்து கிட்டத்தட்ட அனைத்து விளம்பரங்களும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிற தென்றால் அது மிகையல்ல. ஒரு கூல்ரிங்க் குடிக்க வேண்டுமா..? அது நீச்சல் குளத்தில் பெண்ணோடு விளையாடுவது போல் இருக்கும்; ஒரு சேவிங் பிரஸா..? அங்கொரு பெண் உடலெல்லாம் தொட்டுத் தடவி Ôகூட வர, தூங்கÕ தயாராக இருப்பார். நீங்கள் செண்ட் அடித்து ஆபீஸ் போவீர்களா.. அப்படியானால் அங்குள்ள பெண்கள் உங்களோடு நீங்கள் போகும் லிப்ட்டில் கூட புணர்ச்சிக்கு வருவார்கள். டோர் டெலவரி மாதிரிதான் பெண்களும்; அவர்கள் வேண்டுமென்றால் ஒரு மிட்டாய் தின்றால் போதும்; ஒரு இரவு, ஒரு அறை என்றாலும் உங்களோடு படுத்துக் கொள்ள அவர்கள் ரெடி. அட இதென்னங்க, ஒரு டூத்பேஸ்ட்டில் பல் விளக்கிப் பாருங்க, அது டிராபீக் போலீஸ் என்றாலும் உங்கள் பின்னாடியே வந்து விடுவார்கள்..!

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.. ஒரு பைக், கார் ஓட்ட வேண்டும் என்றாலும் சரி, மிகப்பெரிய மாடல் அழகியாய் வர வேண்டுமென்றாலும் சரி, இத்யாதி.. இத்யாதி என எங்கும் திரும்பினாலும் காட்சிப்பொருள் பெண் உடல்தான். எதிலும் ஒரு மாடல் தொப்புள் மற்றும் குண்டியை காட்டுவார். ருசிங்க இதமாய் இருக்கும்.

என் வீட்டுப் பெண்களும், உங்கள்வீட்டு பெண்களும் எப்போதும்போல பார்த்துக் கொண்டிருப்பர். குழந்தை மிச்சர் தின்றபடி வேடிக்கை கொள்ளும். பாலியல் கல்வி வேண்டாமென்ற கோஷம் வேறு காதில் கேட்டுத் தொலைக்கிறது.

நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிப்பதும் இப்போது இவர்கள்தான். Ô கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். அப்படியே சாப்பிடுவேன். வாசனை தூக்கும், என்ன மயங்கிட்டீங்களா..Õ இதைவிட, ஒரு சிறுவன் வீட்டை விட்டு ஓடி காட்டில் தஞ்சம் அடைந்து விடுவான். பல நாள் சோகம்., வீட்டில் ஒரு நூடில்ஸ் செய்ய அந்த வாசனையில் ஆலமர வேர் பிடித்து பாய்ந்து வருகிறான் அவன். எல்லாருக்கும் மகிழ்ச்சி. அப்பாடா இனி காணாமல் போனவர்கள் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டாம்; இதை சமைத்தாலே போதும்; வந்து விடுவார்கள். அப்படித்தானே..?

மற்றொன்றில் வீட்டை விட்டு பெண் ஓடிப்போவதற்காக கயிறு கொண்டு மாடியில் இருந்து இறங்குவாள். எதிர் வீட்டில் காதலன் காத்திருப்பான். அப்போது பார்த்து அந்த பெண்ணின் தந்தை பாப்கான் செய்வார்; அப்புறம் என்ன..? ஓடிபோக நினைத்த மகள் மற்றும் அவளுக்காய் காத்திருந்த காதலன் யாவரும் வீட்டில் ஆஜர். எப்படி யோசனை ?

Ô நான் என் தந்தையைப் போல் இல்லை; என் தந்தை அவர் தந்தையை போல் இல்லை..Õ ஆம். ஒரு கிடாய் வெட்டி இரண்டு பேர் ஆக்கி தின்று அதுவும் போதவில்லை என ஒரு சட்டி கூழையும் குடித்த என் பாட்டன் வாழ்ந்த ஆண்டு நூற்றி பதினைந்து. சாகும்வரை யார் உதவியும் இல்லாமல் வாழ்ந்தவர், ஒரு கும்பா சோற்றையும், இரண்டு கிலோ கறியும் தின்று வாழ்ந்த என் தந்தை வாழ்ந்தது நூறு வயது. இப்போது நான் எத்தனை வயதுவரை வாழ்வேன்.? என் பிள்ளைகளின் நிலை.:? நாற்பதை தாண்டியவுடன் மூட்டுவலி, கண் மங்கல், வயிற்றுப்புண் இத்யாதி இத்யாதி.. ஐம்பதை தொடுவேனா..? தற்போதுள்ள உணவில் நிச்சயமாய் வாய்ப்பில்லை என்றுதான் கூறவேண்டும். இதில் மருத்துவமனைக்கு தினமும் நடை.

இதற்கெல்லாம் யார் காரணம்..? நான் மட்டுந்தானா..? என் பாரம்பரிய விதை, உணவு, தானியங்கள் என்னாயிற்று..? பிடி கத்தரிக்காய் மட்டுந்தான் பிரச்னையா..?

உங்கள் குழந்தை வளராமல் ரொம்பக் குள்ளமாக இருக்கிறதா..? கவலையை விடுங்கள். அதற்கும் ஈசியான வழி இருக்கிறது; ஆம். காம்பிளான் கொடுங்க. மனித உடல் வளர்ச்சி, தோற்றம், அழகு சம்பந்தப்பட்ட எல்லா விவகாரமும் அறிவியல் பூர்வமாய் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன..? இங்கும் அறிவியல் பூர்வமாக மேப் வைத்து, டாக்டர்களிடம் பரிசீலனை செய்துதானே காம்பிளானை தயாரித்துள்ளார்கள் இல்லையா..? நம்பிள்ளைகள் மீது இவர்களுக்குள்ள அக்கறையை பாருங்கள். ஆடு நனையுதே என ஓநாய் கவலைப்பட்டதாம்.

இதுமட்டுமல்ல, சோப்பு சீப்பில் இருந்து, நாம் உபயோகிக்கும் அனைத்துக்கும் இவர்கள் விளக்கம் சொல்வார்கள்; அத்தோடு யோசனையும். நாம் ÔதேமேÕ என உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பது தான் வேலை. Ô அவர்களும் வாடிக்கையாளர்களுக்கு நல்லது செய்த திருப்தியில்Ô கோடிகோடியா பணம் சம்பாதிப்பார்கள். காலத்துக்கும் தொடரும் அவலம். இவைகளை பற்றி அரசுக்கோ, ஆளுபவர்களுக்கோ துளியும் அக்கறை இல்லை. யாவற்றையும் உலக சந்தைக்கு திறந்து விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோதாதென்று பன்னாட்டு முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வேறு.

இவர்களை மிஞ்சும் வகையில் இருப்பது இந்த கைபேசி விளம்பரம்தான். அவர்களின் தொழில்நுட் கிரியேட்டிவிட்டியை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

காடுகளை பாதுகாப்போம்; எப்படி? பேப்பரை மிச்சப்படுத்தி, அதற்கு என்ன செய்ய வேண்டும்.? ஒன்றே ஒன்றுதான், இதை வாங்குங்கள், எல்லாம் நடக்கும். கூடிவாழ்ந்தால் கோடி நன்மை. அப்படியா..? என்ன செய்ய வேண்டும்? ரயிலில் உலக நாட்டு பிரஜைகள் எல்லாம் பயணம் செய்ய வேண்டியதில்லை. மாறாக இதை வாங்கினால் உலகம் உங்கள் உள்ளங் கையில். சோறு தண்ணி வேண்டாம் இது இருந்தால் போதும் அனைத்தும் வசப்படும்.

சரி, நிமிஷத்திற்கு பத்து பைசா, இருபது பைசா என சொல்கிறார்களே என நாம் வாங்கினால்; அதிலும் அவர்கள் நிறுவன எண்ணை கொடுப்பது கிடையாது. அரசு நம்பரை கொடுத்து விட்டு உயர் தொழில்நுட்ப திருட்டில் ஈடுபடுகின்றனர். ஆதலால் அதையும் பார்த்துத்தான் வாங்க வேண்டியுள்ளது. சமீபத்தில், ஐநூறு ரூபாயிக்கு செல்போன் விற்ற நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் கட்டியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதையெல்லாவற்றையும் விட மற்றொரு முக்கியமான விசயம், இவர்கள் கூறும் நாட்டுப்பற்று, தேச நலன். ஆமாம். அந்த வேடிக்கையும் பார்ப்போம்.

ஒரு கட்சிக்காரர் ரொம்ப கவலையாக இருப்பார், அவரது அடி வருடிகள் உங்களுக்கு சீட் கிடைக்க வில்லையென்றால் கட்சியை ஸ்தம்பிக்க செய்து விடுவோம் என கோஷம் போடுவார்கள். Ô அட இதுல சீட் வாங்குறது ஒரு விசயமா.. நான் ஐபில் சீட்டை சொன்னேன்.Õ அனைவரது முகத்திலும் அசடு. பின் அதற்கும் கோஷம். அரசியலில் சீட் வாங்கி எம்பி, எம்எல்ஏக்கள் ஆவது, பாராளுமன்றம், சட்டமன்றம் போவது என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நாடாவது, மக்களாவது.. அதெல்லாம் எளிது. அதை விட இந்த நாட்டுக்கு முக்கியமானது ஐபிஎல் டிக்கெட். மக்களின் அடிப்படை வசதிகள் தானாக பெருகி விடும்.

ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒரு இளை-ஞனை விரட்டிப்பிடித்து டிக்கெட் கேட்பார். அவன் இப்போதுதான் வாங்கப்போகிறேன் என்பான். Ô இது என்ன உன் மாமனார் ரயிலா.. என்க, அட ரயில் டிக்கெட்டா.. நான் ஐபில் டிக்கட்ன்னு நினைச்சேன்.. என கூற, தேசியம் கீதம் ஒளிக்கும். உணர்ச்சி பூர்வமாய் மைதானத்தி¢ல் மக்கள் சேர்ந்து பாடுவார்கள். நம் கிரிக்கெட் ஜாம்பவான்கள் உள்பட அனைத்து நாட்டு வீரர்களும் இருப்பார்கள். அப்பாடா மற்றொரு சுதந்திரம் கிடைத்த திருப்தி. எப்படி..?

அதாவது இவர்கள் காட்டும் தேசம், நாட்டுப்பற்றெல்லாம் எது தெரியுமா.. ஐபிஎல் டிக்கெட் வாங்குவது..? இதில் நாடு முழுவதும் சிவப்பு கம்பள வரவேற்பு வேற. இதுமாதிரி தேச நலன் பற்றி பேசும் நிறைய விளம்பரங்களை நாம் பார்க்கலாம். ஒருக்கால் கோடிகளில்தான் தேசநலன் இருக்கிறதோ..? அரசியல்வாதிகளை கேட்டால் தெரியும். சொல்வார்களா..?

அப்படியானால் விளம்பரம் செய்வது தவறா..? ஜனநாயக நாட்டில் இதற்குகூட உரிமை இல்லையா..? என கேட்கலாம். இருக்கிறது. எதற்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா.? அவரவர்கள் நிறுவன பொருட்களை விற்பனை செய்ய தற்போதுள்ள போட்டிகளில் பல நவீன யுத்திகளை கையாண்டு சந்தைப்படுத்தலாம். அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. அப்படியான விளம்பரங்களும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஏற்கனவே நிகழ்ந்த வரலாறுகளை அதிலும் பல நூற்றாண்டுகளாய் நிகழ்ந்த மனித வளர்ச்சியை மிக வும் மலிவுப்படுத்தி Ôகடி ஜோக்குகளாய்Õ ஆக்கி இனி வரும் தலைமுறைக்கு வரலாற்றின், புராண கதைகளின் ஆழத்தை எளிமைப்படுத்தி மழுங்கடித்து மறக்கடிக்க வேண்டுமா..? ரத்தமும் சதையுமான பெண்களை காட்சிப் பொருளாக்கி, உடலை கூறாக்கி சந்தையில் விற்க வேண்டுமா..? அன்றாடம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் இவை யாவற்றையும் எப்படி உள் வாங்குவார்கள்..?

ஏற்கனவே காதல், அன்பு, காமம், செக்ஸ் லீலை, கருணை, தியாகம், இந்தியன், நாட்டுப்பற்று இத்யாதி.. இத்யாதி யென எல்லா வார்த்தைகளையும் மீடியாக்கள் போட்டு அடித்து, மிகவும் மலிவானதாய் அர்த்தமற்றதாய் மாற்றி விட்டுள்ளது போதாதா..? பெருங்கதையாடலின் எந்த சொல்லையும் இவைகள் விட்டு வைத்திருக்கின்றவா..?

இன்றைய சூழலில் மிகவும் உன்னிப்பையால் கவனிக்க வேண்டியது மீடியாக்கள் மட்டுந்தான். இங்கிருந்து கிளம்பும் எந¢த ஒரு ஒற்றைச் சொல்லும், காட்சியும் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் ஒருவரையும் பாதித்து விடுகிறது இல்லையா..? நீஙகள் விரும்பியோ, விரும்பாமலோ நினைவு, நினைவிலியில் அதிலும் குழந்தைகளுக்கு இவை தானாக ஊட்டப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது யார்..? இதற்கெல்லாம் ஒரு வரைமுறை கிடையாதா..? உலக சந்தையை திறந்து விட்டால் எந்த வரலாற்றையும், இதிகாசங்களையும் எப்படி வேண்டுமானாலும் கூறலாம். அப்படித்தானே..?

மறுபடியும் அதே விளம்பரம் ஓடிக்கொண்டிருக்கிறது. என்ன செய்யலாம்..?





..........................................................









Comments

  1. தவசி அவர்களோடு பணியாற்றியுள்ளேன். நாம் படைக்கும் படைப்புகள் நமக்கு சாகா வரம் தரக்கூடியவை என்று அவர் கூறியதை நினைத்து பார்க்கிறேன்...

    ReplyDelete

Post a Comment