புதுப்புனல் மே இதழில் - ராஜ விளையாட்டு - ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க் குறுநாவல் தொடர்ச்சி



(மே இதழ் புதுப்புனலில்)



ராஜ விளையாட்டு

(தொடர்ச்சி)



முதல் தடவையாக, என்னுடைய துணிகரமான திருட்டின் அளப்பரிய அனுகூலத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன் நான். திடீரென, நான் ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தேன். இலக்கில்லாதது, பயனற்றது என்று சொல்லிக்கொள்ளுங்கள் – பரவாயில்லை, ஆனால், எப்படியிருந்தாலும் சரி, அது என்னைச் சுற்றிப் படர்ந்திருந்த வெறுமையை இல்லாம லாக்கிய ஒரு வேலை தான். இந்த 150 பந்தய விளையாட்டுகள் மூலம் இடம் மற்றும் காலத்தின் ‘ஆளை நசுக்கிப் போடும் இயந்திரத்தனத்திற்கு எதிராக ஒரு அதியற்புத ஆயுதம் என் கைவசமாகியிருந்தது! இந்தப் புதிய வேலையின் ஈர்ப்பையும், கவர்ச்சியையும் பத்திரமாக, ‘உள்ளது உள்ளபடி’ பராமரிக்க நான் என்னுடைய ‘நாளை’ இதுமுதல் ம்கச் சரியாகப் பகுத்துக் கொண்டேன்; காலையில் இரண்டு விளையாட்டுகள், மதியம் இரண்டு, மாலையில் காலை விளையாட்டுகளை சடுதியில் மீள்பார்வைக் குட்படுத்துதல். அந்த வழியில் என்னுடைய நாள், இதுவரை உருவற்ற, இறுகாத இனிப்புப் பாகாய் கிடந்தது, திருத்தமான வடிவத்தைப் பெற்றது. என்னை ஒரேயடியாக அயர்ச்சியடையச் செய்யாமல், அதேநேரம் செயல்பட்டுக்கொண்டேயிருந்தேன். ஏனெனில், சதுரங்க விளையாட்டிற்கு மிக அருமை யான ஒரு குணாம்சம் இருந்தது! அது ஒருவருடைய மூளைச் சக்தியை ஒரு குறுகிய பகுதியில் நிலைகொள்ள வைப்பதால் சிந்தனையின் மிகக் கடுமையான முயற்சியால் மூளை நைந்துபோகாமல் காக்கப்பட்டது. அதன் சக்தித்திறனும், இயக்கவிசையும் உண்மையில் மேம்படுத்தப் பட்டது.

”இந்த சாம்பியன் பட்ட பந்தயங்களை முதலில் நான் இயந்திரத் தனமாகத் தான் விளையாடினேன். ஆனால், படிப்படியாக அவை எனக்குள் ஒரு கலாபூர்வமான ஆனந்த மூட்டும் புரிதலைத் தட்டி யெழுப்பியது. எதிரியை சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி வெட்டுவதிலும், எதிரியின் தாக்குதலிலி ருந்து என்னை சாதுர்யமாகத் தற்காத்துக் கொள்வதிலும் அடங்கியிருந்த நுட்பமான அம்சங்களை, தந்திரோபாயங்களை, மற்றும் உத்திகள், வழிமுறைகளை சிலாகிக்கக் கற்றுக் கொண்டேன். அடுத்தடுத்த கட்டங்களை முன்னூகிக்கும் மனக்கண்ணால் பார்க்கும் செயல்நுட்பத்தைக் கற்றுக் கொண்டேன். காய்களின் நகர்வுகள், அவற்றின் இணைவுகள் மற்றும் எதிர்த்தாக்கு தல்கள் போன்ற வற்றின் செயல்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றேன்; விரைவிலேயே ஒவ்வொரு சாம்பிய னுடைய தனித்தன்மைவாய்ந்த விளையாட் டுத் திறனையும், பாணியையும், தனிமுத்திரைகளையும் என்னால்

தெளிவாக அடையாளங்காண முடிந்தது. ஒரு தேர்ந்த வாசகரால் ஒரு சில வரிகளைக் கொண்டே அதை எழுதிய கவிஞரைக் கச்சிதமாக அடையாளங்கண்டுகொள்ள முடிவதைப் போல். வெறுமே நேரத்தை இட்டுநிரப்பும் வழியாக ஆரம்பமான ஒன்று விரைவிலேயே ஒரு ஆனந்தக்கிளர்ச்சியாக மாறியது. தலைசிறந்த சதுரங்க விளையாட்டு விற்பன்னர்களான ALEKHINE, LASKER, BOGLJUBOFF TARTAKOWER போன்றவர்களெல்லாம் என்னுடைய தனிமைவாசத்தில் அரிய நண்பர்களாக என்னோடு வந்து வசிக்கத் தொடங்கினார்கள்.

“என்னுடைய மௌனச்சிறை ஒவ்வொரு நாளும் இடையறாத பல்வகைமைகளால் ஆசிர்வதிக் கப்பட்டது. தவிர, உண்மையாகவே, அந்தப் பயிற்சிகளின் ஒழுங்கமைவு வெகுவாக சீர்குலைந்திருந்த என்னுடைய எண்ணவோட்டத்தின் ஆரோக்கியத்தை மீட்டெடுத்தது. என்னுடைய மூளை புத்துணர்ச்சி பெறுவதாக உணர்வதையும், தொடர்ச்சியாக சிந்திப்பதன் ஒழுங்கில் அது புதிதாகக் கூர்மையடைந் திருப்பதையும்கூட என்னால் உணரமுடிந்தது.

விசாரணைகளின்போது இதை வெளிப்படையாகவே காணமுடிந்தது. முன்பைவிட தெளிவாக சிந்திக்கிறேன் என்பதும், கவனம் சிதறாமல் கச்சிதமாக சிந்திக்கிறேன் என்பதும் புலப்பட்டது. சதுரங்கப் பலகை, அது அறியாமலேயே பொய் அச்சுறுத்தல்களுக்கும், கள்ளத்தனமான தந்திரங்க ளுக்கும் எதிராய் என்னுடைய தற்காப்பு முயற்சிகளை வலுப்படுத்தியிருந்தது. அந்த நேரம் முதல் நான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி எதிராளிக ளுக்கு என்னைத் துருவ வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கவில்லை. ஹிட்லரின் விசாரணைக் கூடம் என்னை ஒருவித மரியாதையோடு பார்க்க ஆரம்பித்திருப்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஒருவேளை, மற்றவர்களெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளத்தாலும், உடலாலும் தகர்ந்துபோகும்போது என்னை மட்டும் அத்தனை உறுதியாக எதிர்த்துநிற்கச் செய்யும் சக்தித்திறனாற்றலின் ரகசியம் என்ன என்று அவர்கள் தங்களுக்கிடையில் கேட்டுக்கொண்டிருந்திருக்கக் கூடும் ;

இந்த மகிழ்ச்சிகரமான காலம், புத்தகத்திலிருந்த அந்த 150 பந்தய விளையாட்டுகளை தொடர்ச்சியாக, தினந்தினம் நான் விளையாடிக்கொண் டிருந்த காலம் கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் நீடித்தது. பிறகு, திடுமென நான் ஒரு நிறுத்தத்தை எட்டும்படியாகியது. திடுமென அந்த அதலபாதாள வெறுமை என் முன் மீண்டும் விரியத் திறந்துகொண்டது. காரணம், அந்த விளையாட்டுகள் ஒவ்வொன்றையும் இருபதிலிருந்து முப்பது தடவைகள் விளையாடி முடித்துவிட்டதால், அதிலிருந்த புதுமை மற்றும் ஆச்சரியத்தின் ஆனந்தம் தொலைந்துவிட்டது. அவற்றின் சக்தித்திறன், அதுவரை மிகவும் பரவசமூட்டுவதாகவும், எழுச்சிகொள்ளச் செய்வதாகவும் இருந்தது, நீர்த்துப்போய்விட்டது. அந்தப் பந்தய விளையாட்டுகள் ஒவ்வொன்றின் ஒவ்வொரு நகர்வும் எனக்கு மனப்பாடமாகிவிட்ட நிலையில் அந்த விளையாட்டுகளை மீண்டும் மீண்டும் விளையாடுவதில் என்ன சுவாரசியமிருக்க முடியும்? ஒரு விளையாட்டின் முதல் நகர்வை ஆரம்பித்ததுமே அந்தப் பந்தயத்தின் முடிவு என் மூளையில் தன்னையுமறியாமல் முண்டியடித்துக்கொண்டு மேலெழுந்தது. விளையாட்டில் முன்பி ருந்த ஆச்சரியம், சுவாரசியம், மன அழுத்தம், பிரச்னைகள் என்று எல்லாமே பறிபோய்விட்டது. வேறு விளையாட்டுகளைக் கொண்ட வேறொரு புத்தகம் கிடைத்தால் மட்டுமே என் மனம் இனியும் அதில் ஈடுபாட்டுடன் பொருந்தியிருக்க முடியும்.அப்போது மட்டுமே எனக்குத் தேவையான உழைப்பும், வேறொன்றில் கவன ஈர்ப்பும் ஏற்பட முடியும். இது முழுக்க முழுக்க அசாத்தியமான விஷயம் என்பதால் இந்த விசித்திர வலைப்பின்னலிலிருந்து வெளியேற ஒரேயொரு வழி தான் இருந்தது. என்னை நானே கூட்டாலியாகச் சேர்த்துக்கொண்டு விளையாடுவது, அல்லது, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், எனக்கு எதிராக நானே விளையாடுவது.

“இந்த ராஜ விளையாட்டின் அறிவார்த்தப் பண்பு குறித்து நீங்கள் எத்தனை தூரம் எண்ணிப் பார்த்திருக்கிறீர்களென்று எனக்குத் தெரியாது. ஆனால், இது குறித்து மிக மிக மேலோட்டமாக எண்ணிப் பார்த்தாலும்கூட, சதுரங்க விளையாட்டு முழுக்க முழுக்க மூளை சார்ந்தது – இதில் அதிர்ஷ்டத்திற்கே இடமில்லை என்பதும், அவ்வாறிருக்க உங்களுக்கு நீங்களே எதிர்தரப்பினராக விளையாட விரும்புவது, பகுத்தறிவோடு பேசுவதானால், அபத்தமானது என்பதும் தெளிவாகவே புரிந்துவிடும். எனவே, சதுரங்க விளையாட்டின் ஈர்ப்புசக்தி என்பது அதன் நுட்பங்களும் உத்திகளும் இருவேறு மூளைகளில் உருவாகி வளர்கிறது என்பதில் தான் அடங்கியிருக்கிறது. இருமூளைகள் ஈடுபடும் இந்தப் போரில் ‘வெண்மை’யின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பது ’கருமை’க்குத் தெரியாது, அப்படியிருந்தும் அவன், கருமையின் நகர்வை எப்படியெல்லாம் முறியடிக்கலாம் என்று சதாசர்வகாலமும் சிந்தித்தபடியிருக்கிறான்; வெண்மையோ கருமையை முறியடிக்கப் பெருமுயற்சி செய்தவண்ணம், கருமையின் சூழ்ச்சிகளை எதிர்த்தவண்ணமே இருக்கிறது. இதில், வெண்மையும், கருமையும் ஒரே மனிதன் தான் என்று கற்பனை செய்துபாருங்கள்! எப்படியிருக்கும்! இதில் எத்தகைய முரண் இருக்கிறது என்று பாருங்கள்!

அதே மூளைக்கு ஒரு விஷயம் தெரியும். ஆனால், அதே சமயம், அந்த மூளைக்கு அந்த மூளைக்கு அந்த விஷயம் தெரிந்திருக்கலாகாது! அதாவது, வெண்மையின் கூட்டாளியாக அது செயல்படும் போது அது ஒரு கணம் முன்பாக தான் என்ன செய்ய விரும்பினோம் என்பதையும், கருமையின் கூட்டாளியாக இருந்தபோது என்ன செய்ய நினைத்தோம் என்பதையும் சட்டென்று, ஒரு சொடுக்கில் மறந்துவிட வேண்டும். இத்தகைய ‘இருவழி சிந்தித்தல்’ உண்மையிலேயே ஒருவருடைய பிரக்ஞை யில் ஒரு முழுமையான பிளவை, ஒரு பொறியியந்திரம் போல் ‘ஸ்விட்ச்-ஆன்’ – ’ஸ்விட்ச்-ஆஃப்’ செய்துகொள்வதற்கான மூளையின் தன்னிச்சையான திறனாற்றலை முன்னனுமானம் செய்து கொள்கிறது. ஒருவர் தனக்கெதிராகவே சதுரங்க விளையாட்டை விளையாட முயற்சித்தல் ஒரு அப்பட்டமான முரண்நிலையை முன்வைக்கிறது. தன்னுடைய நிழலின் மேலாய் உயரந்தாண்டலைப் போல்.

”நல்லது, சுருக்கமாகச் சொல்வதென்றால் எனக்குத் தாங்கமுடியாமல் போய்விட்டதில் இந்த அபத்த சாத்தியத்தை மாதக்கணக்காக முயன்றுபார்த்தேன். எனக்கு மாற்றுவழி என்று எதுவும் இருக்க வில்லை. இந்த வடிகட்டிய முட்டாள்தனம் ஒன்றே எனக்கு இருந்தது. அதாவது, நான் முழுப் பைத்தியமாகிவிடாமலிருக்க, அல்லது, ஒரு முழுமையான மூளைசார் சரிவில் புதைந்துபோய் விடாதிருக்க எனக்கிருந்த ஒரே வழி அதுதான். நானிருந்த அந்த அதிபயங்கரமான சூழ்நிலை, அந்த பீதியூட்டும் வெறுமையால் மீட்சியின்றி பீடிக்கப்பட்டுவிடாமலிருக்க என்னை இவ்வாறு வெள்ளை ‘ஈகோ’, கருப்பு ‘ஈகோ’ என்று இரண்டாகப் பிளந்துகொள்வதையாவது முயன்றுபார்த்துவிடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியது”.

டாக்டர் ‘பி’ கப்பலின் மேல்தளத்தில் தன்னுடைய நாற்காலியில் பின்னேகிச் சாய்ந்துகொண்டு ஒரு நிமிடம் கண்களை மூடியவாறிநுதார். மனதைச் சிதறடிக்கும் ஒரு நினைவுகூரலை வலுக்கட்டாய மாக உள்ளே தள்ளிவிட பிரயத்தனப்படுவதைப்போல் இருந்தது அவருடைய செய்கை. மீண்டும் அவருடைய வாயின் ஓரத்தில், அவரால் கட்டுப்படுத்த முடியாத அந்த நடுக்கத் துடிப்பை நான் பார்த்தேன். பிறகு, தன்னுடைய நாற்காலியில் சற்றே தன்னை நிமிர்த்தியமர்த்திக்கொண்டார் அவர்.

“ஆக – இதுவரை எல்லாவற்றையும் நான் உங்களுக்கு ஓரளவு தெளிவாகவே விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால், வருத்தத்திற்குரிய அளவில், அடுத்து என்ன நடந்தது என்பதை என்னால் அதேயளவு தெளிவாக எடுத்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை. காரணம், இந்த புதிய வேலைக்கு அந்த அளவுக்கு மூளையின் முழுமொத்தமான கவனம் தேவைப்பட்டதால், அதே சமயம் சுய-கட்டுப்பாட்டையும் இழக்காதிருத்தல் என்பது சாத்தியமாகவே முடியாத ஒன்றாகிவிட்டது. நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னேன் – உங்களையே எதிர்த்து நீங்கள் செஸ் விளையாட விரும்புவது என்பது அபத்தமானது; ஆனால், இந்த அபத்தநிலைகூட உங்கள் எதிரில் ஒரு தூலமான சதுரங்கப்பலகை இருக்கும் பட்சத்தில் ஒரு குறைந்த பட்ச வாய்ப்பையாவது அளிக்கும். ஏனெனில், அந்த சதுரங்கப்பலகை நிஜமாகவே உங்களுக்கு எதிரே இருக்கிறது என்ற காரணத்தால், ஒரு குறிப் பிட்ட அளவு தொலைவை, விலகலை உங்களுக்கு சாத்தியமாக்குகிறது. உங்களுக்கு எதிராக உள்ள ஒரு மெய்யான விலகிய பரப்பு அது. ஒரு மெய்யான சதுரங்கப் பலகையும், மெய்யான காய்களும் எதிரேயிருக்கும்போது நீங்கள் சில இடைநிறுத்தங்களை ஏற்படுத் திக்கொண்டு எதிரெதிர் தரப்பினராக யோசிக்க வழியுண்டு. முதலில், மேஜையின் ஒரு புறத்தில் நின்றுகொண்டு விளையாட முடியும்; பின், மறுபக்கத்தில் போய் நின்றுகொள்ள முடியும். அவ்வாறு வெள்ளையின் கண்ணோட்டத்திலும் ஆட்டநிலையை அவதானிக்க வழியுண்டு.

ஆனால், இந்தவிதமான போரில் ஈடுபடுவதென்பது, நான் செய்தேயாகவேண்டியிருந்த விதத்தில் – என்னை நானே எதிர்த்தபடி, அல்லது என்னோடு நானே மோதியபடி, என்னை நானே எனக்கெதிராக, சூக்குமமான அளவு, கற்பனையிலான ஒரு வெளியில் நிலைப்படுத்திக்கொண்டு ஆடுவதற்கு நான் என்னுடைய மனக்கண்களின் முன் அந்த அறுபத்திநான்கு கட்டங்களின் நடப்பு நிலைமைகளை மிகச்சரியாகப் பொருத்திவைத்திருக்க வேண்டியிருந்தது. கட்டங்களின் அப்போதைய சூழமைவுகளை மட்டுமல்லாமல் இரண்டு ஆட்டக்காரர்களின் அடுத்தடுத்த நகர்வுகளையும், சாத்தியமாகும் சிந்த னைப்போக்குகளையும் நான் கணக்கிட்டுப்பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதெல்லாம் கேட்க எத்தனை அபத்தமாக ஒலிக்கும் என்று எனக்குத் தெரியும், என்றாலும் – என்னுடைய இரண்டு சுயங்களையும் இருமடங்காக, மும்மடங்காக , ஆறு, எட்டு, பத்து என பன்மடங்காக – வெள்ளை, கருப்பு ஆகிய இரண்டு தரப்பிற்குமாகப் பெருககிக்கொள்ள வேண்டியிருந்தது. எப்பொழுதுமே நான்கு அல்லது ஐந்து நகர்வுகளை முன்கூட்டியே கணக்கிட்டுக்கொள்ள வேண்டியிருந்தது





Comments