புதுப்புனல் மாத இதழ் - தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது!

புதுப்புனல் தலையங்கம்




சமீபத்திய ஜப்பான் பேரழிவு –

-சக மனிதர்களின் வலியுணர்வோம்




ஹிரோஷிமா-நாகசாகியில் இரண்டாம் உலகப்போரின் சமயம் போடப்பட்ட அணுகுண்டுகளால் சின்னாபின்னமாக்கப்பட்டும் தன் விடா முயற்சியாலும் அயரா உழைப்பாலும் இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்கும் ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிர அளவிலான நிலநடுக்கமும் அதன் விளைவாக ஏற்பட்ட ஆழிப்பேரலைத் தாக்கமும் மிகக் கடுமையான, கொடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பொருள் இழப்புகளும், உயிரிழப்புகளும் மிகவும் அதிகம். அதே சமயம் ஜப்பான் நாட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாதிருப்பின் சேதம் இப்போது நேர்ந்திருப்பதைவிட பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பது தெளிவு.



ஜப்பான் மக்களின் வலிகளையும், இழப்புகளையும் நம்மால் சக-மனிதர்களாக நன்றாகவே உள்வாங்கிக்கொள்ள முடியும்; முடியவேண்டும். சமீபத்தில் நடிகர் தனுஷ் பேசுவதாக அடிக்கடி முன்னணித் தொலைக்காட்சி அலைவரிசைகளில் காண்பிக்கப்பட்ட திரைப்பட விளம்பரக் காட்சியில் “நாங்கள்ளாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங் அடிக்கிறவங்க” என்பதாய் வரும் வசனத்தை இந்தப் பேரழிவின் பின்னணியில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. முன்பு அந்நியன் படத்தில், “ஹிரோஷிமா நீ தானோ, நாகசாகி நீ தானோ, உன்னோடு தானோ, என் காதல் பாமோ”, என்று காதலுக்கு இரண்டாம் உலகப்பொரின் பேரழிவை உவமையாக்கியிருந்தார்கள். சமீபத்திய ஜப்பான் பேரழிவின் பின்னணியில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்களுடைய மனிதநேயமற்ற போக்கை மறுபரிசீலனை செய்து வெட்கித் தலைகுனிந்து இனிமேலும் இயற்கைப் பேரழிவுகள், அத்தகைய மனிதகுல பேரிழப்புகளை, வேதனைகளை ‘கொஞ்சங்கூட வலியுணராமல்’ பகடி செய்பவர்களாய் இயங்க மாட்டோம் என்று உறுதிகொள்ள வேண்டும். அவ்வாறின்றி, தொடர்ந்து மனிதகுல பாதிப்புகளை நகைச்சுவைப்பொருளாக்கும், பரபரப்புக் கதைக்கருவாக்கும் ‘போலிக்கலைஞர்களை’ப் புறமொதுக்கும் விழிப்புணர்வு குறிப்பாக அவர்களுடைய ரசிகர் மன்றத்தினரிடம் ஏற்படவேண்டும்.



காலநிலை மாற்றம், அதை விரைவுபடுத்தும், தீவிரப்படுத்தும் காரணிகள், அவை ‘மனிதர்களின் செயல்பாடுகளால், பயன்பாடுகளால் அதிகரித்துவருதல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள், பனிப்பாறைகள் உருகி கடல்மட்டங்கள் உயர்ந்துவருதல், கரியமிலவாயு வளிமண்டலத்தில் அதிகமாகச் சேர்ந்துகொண்டே போவதால் இயற்கைச் சுழற்சியில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் – இவை குறித்தெல்லாம் உலக மக்களாகிய நாம் தீவிரமாகச் சிந்தித்து இந்த எதிர்மறை விளைவுகளை மட்டுப்படுத்த வேண்டிய முயற்சிகளில் ஒருங்கிணைந்த அளவில் முனைப்பாக ஈடுபட வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இயற்கைச் சீற்றத்தில் ஏற்படும் இத்தகைய ஆறா ரணங்கள் ஓரளவு எதிர்பாராததும், தவிர்க்கமுடியாததும்கூட. ஆனால், ஆறறிவு மனிதர்களால் நடத்தப்படும் ஆதிக்கப்போர், எளியாரை வலியார் ஒடுக்குதல், ஏற்றத்தாழ்வுகளை மனிதர்களிடையே சுய ஆதாயத்திற்காய் தொடர்ந்து இருந்துவரச் செய்தல், சக-மனிதர்களைச் சுரண்டுதல், அடிமைப்படுத்துதல் போன்ற அக்கிரமங்கள் அநீதிகளைத் தடுக்காமல், கைவிடாமல் ஊக்குவிப்பவர்களையும், அவற்றில் குளிர்காய்பவர்களையும் பற்றி எண்ணும்போது....நெஞ்சு பொறுக்குதில்லையே

Comments