புதுப்புனல் அக்டோபர் மாத இதழிலிருந்து சில படைப்புகள்

மீண்டும் மணிமேகலை!

நாடகம்

எழுதியவர் : லதா ராமகிருஷ்ணன்





காட்சி – 1




இடம்: மங்கலான ஒளியூட்டப்பட்டிருக்கும் அரங்க. வரிசையாக இருக்கைகள் அமைந்துள்ளன. சன்னமான மெல்லிய இசையிழைகள் அரங்கில மிதந்துகொண் டிருக்கின்றன.

கதாபாத்திரங்கள்: மணிமேகலை, நிகழினி மற்றும் பார்வையாளர்கள்

( திரு.வெளி ரங்கராஜன் இயக்கத்தில் உருவான மணிமேகலை நாடகத்தின் கடைசிப் பகுதி மேடையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.. பிரதான பெண் பாத்திரமான மணிமேகலை, ஒரு அழகிய இளம்பெண், அழியாப் புகழ் பெற்ற தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தின் கதாநாயகன் தன் மனதைப் பறிகொடுத்த மாதவியின் மகள் ஒரு துறவியின் உடையில் காட்சியளிக்கிறாள். அவள் உலக இன்பங்களுக்காகவும், புலனின்பக் கிளர்ச்சிகளுக்காகவும் தன் மனதை ஏங்கவிடலாகாது என்றும், மாறாக, மானுடம் பயனுற சேவை செய்வதிலே தன் மனதை ஒருமுகப்படுத்தவேண்டுமென்றும் கூறி அவளுடைய கையில் மணிமேகலா தெய்வம் சற்று முன்பு கொடுத்திருந்த அட்சயபாத்திரத்தை ஏந்திக் கொண்டிருக்கிறாள். அந்த தெய்வாம்சம் பொருந்திய பாத்திரத்தின் உதவியோடு அவள் எத்தனை பேருக்குத் தன்னால் உதவ முடியுமோ அத்தனை பேருக்குப் பசிப்பிணியைத் தீர்த்து உதவிபுரிய வேண்டும் என்பது மணிமேகலா தெய்வத்தின் கட்டளை.

மேடையில் சிலருக்கு அந்தப் பாத்திரத்திலிருந்து உணவு வழங்கி முடித்த பிறகு மணிமேகலை மேடையிலிருந்து கீழே இறங்கி பார்வையாளர்கள் மத்தியில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிலருக்கு உணவளித்தவாறு நகர்கிறாள். அப்படி மணிமேகலையிடமிருந்து உணவு கிடைக்கப் பெற்றவர்களில் நிகழினியும் ஒருத்தி. இவ்வாறே அரங்கின் வாயில் வரை சென்றுவிடும் மணிமேகலை வாயில் வழியாக வெளியேறி பார்வைப்பரப்பிலிருந்து மறைகிறாள். பார்வையாளர்களிடமிருந்து பதற்றமும், பரபரப்புமாய் பல்வேறு குரல்கள் கிளம்புகின்றன.)



குரல்கள்: ஹோ, எங்கே மணிமேகலை? எங்கே அவள்?



ஒரு ஆண் குரல்: (ஆர்வமாக) அந்த உணவு நாம் இங்கே வழக்கமாகச் சாப்பிடுவதிலிருந்து வேறுபட்டு இருந்ததா? எப்படியென்று சொல்ல முடியுமா?



பெண் குரல் ஒன்று: அவள் எங்கே காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டாளா என்ன?



ஒரு குழந்தை: அந்த அக்கா பாத்திரத்தை என் கையில் கொடுத்திருந்தால் எத்தனை நன்றாயிருந்திருக்கும்!நாள் முழுக்க அதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்க முடியும்!



(நிகழினி, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, பிரமிப்பில் வாயடைத்துப் போனவளாய் தன்னுடைய உள்ளங்கைகளைப் பார்த்துக்கொள்கிறாள்! )



இன்னொரு குரல்: ஹேய், அங்கே பார், அவளுடைய கைகளில் எதுவுமேயில்லை..!



நிகழினி: ஆனால், எல்லாமே இருக்கின்றன, என்னுடைய கைகளில், உங்களுடைய கைகளில், அவர்களுடைய கைகளில்... நம்மால் அவற்றைப் பார்க்க முடியவில்லை என்பது உண்மையிலேயே மிகவும் வருத்தமளிக்கும் ஒன்று தான்.... ஏனெனில், நம்மால் மட்டும் அவற்றைப் பார்க்க முடிந்தால் நாம் அவற்றை நமது நன்மைக்கும், மற்றவர்களின் நன்மைக்கும் பயன்படுத்த முடியுமே...



(அவள் தனக்குள் முணூமுணுத்துக்கொண்டு மெதுவாக அரங்க வாயிலை நோக்கி நகர்கிறாள்)





திரை




காட்சி - 2



இடம்: நிகழினியின் இல்லம். அங்கே அவளுடைய அறையில் ஒரு கட்டில், புத்தக அடுக்கு, மேஜை, நாற்காலி இருக்கின்றன. அறையின் ஒரு மூலையில் குடிநீர் மண்குடுவையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதிகாலைப் பண் சன்னமாகப் பின்னணியில் இசைத்துக்கொண்டிருக்க, கூடவே பறைகள் கீச்சிடும் ஒலிகள், நாள் தொடங்கும் ஒலிகள் சில
இணைந்து கேட்டுக்கொண்டிருக்கின்றன.


கதாபாத்திரங்கள்: மணிமேகலை, நிகழினி.

(அதிகாலை. நிகழினி, ஆழ்ந்த உறக்கத்திலிருப்பவள், கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு எழுந்து போகிறாள். கதவின் பக்கம் வந்ததும் சற்றே பயமும், கவலையுமாய், உள்ளிருந்தவாறே குரல் கொடுக்கிறாள்)


நிகழினி : யார் அது?

(வெளியேயிருந்து கிசுகிசுப்பாய் ஒரு குரல் பதிலளிக்கிறது) ”நான் தான். மணிமேகலை. தயவு செய்து கதவைத் திற...”

நிகழினி : என்ன? மணிமேகலையா! கடவுளே! ( விரைந்து கதவைத் திறக்க, மணிமேகலை உள்ளே விரைந்தோடி வருகிறாள்)

நிகழினி : ( வியப்பும் திகைப்பும் கரைபுரண்டோட) ஹோ, நன்றி மணிமேகலை! என் வீட்டிற்கு வந்தமைக்கு மிகவும் நன்றி! ஆனால், நேற்று எங்கே போய்விட்டாய் நீ?

மணிமேகலை: பிராத்திக்கவேண்டி கடற்கரைக்குச் சென்றிருந்தேன். ஆனால், பிரார்த்தித்து முடித்து நான் கண்ணைத் திறந்தபோது இருள் கவிந்திருந்தது. என்னைச் சுற்றி ஆண்கள் கணிசமான எண்ணிக்கையில் நின்றுகொண்டிருந்தனர். வேட்கையும், வன்மமும் நிறைந்த கண்களோடு நின்றுகொண்டிருந்தனர். எப்படியோ, அவர்களிடமிருந்து விலகி அந்த இடத்தைவிட்டு நீங்கி வந்தேன் நான்...

நிகழினி : ( திக்பிரமையடைந்தவளாய்) ஆனால், நீ எப்படி இங்கே...?

மணீமேகலை: ( மென்மையாக முறுவலித்தவாறே) ஏன் கேட்கிறாய்? உனக்கு நான் வந்தது பிடிக்கவில்லையா? என் வருகையை நீ விரும்புவாய் என்று நான் கருதினேன்..

நிகழினி : ( வேகவேகமாக) – உன்னை மனமார வரவேற்கிறேன் மணிமேகலை! ஆனால், இங்கே, என்னைத் தேடி உன்னை வரச்செய்தது எது என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.

மணிமேகலை: ஒருக்கால், உன்னுடைய விழிகளில் கண்ட தேடலாயிருக்கலாம்... நேற்று நான் என்னிடமுள்ள இந்த தெய்வீகப் பாண்டத்திலிருந்து ( அட்சயப்பாத்திரத்தை சுட்டிக்காட்டுகிறாள்) உனக்கு உணவு வழங்கியபோது உன்னுடைய கண்களில் மட்டுமீறிய பசியைப் பார்த்தேன். நிச்சயம் அது ஒற்றை நபருக்கு மட்டுமானதாக இருக்கமுடியாது.... இந்த அட்சயப்பாத்திரத்தையே என்னுடைய கைகளிலிருந்து பிடுங்கிக் கொள்ள எத்தனை ஏங்கினாய் நீ! ( அன்போடு மீண்டும் புன்னகை செய்கிறாள்). எனவே, உன்னையும் என்னோடு அழைத்துச் சென்றால், சரியான நபர்களுக்கு உதவி செய்ய, உணவளிக்க என்னால் இயலும் என்று எனக்குத் தோன்றியது.... என்னோடு நகர்வலம் வருவாயா நிகழினி?

நிகழினி : ஓ! கண்டிப்பாக வருகிறேன் தோழி... ! ஆனால், உனக்கு எப்படி என்னுடைய பெயர் தெரியும்?!

மணிமேகலை: நான் உன்னை நிகழினி, அதாவது, இனி நிகழப் போவது என்று தானே குறிப்பிட்டேன்! தவிர, பெயரில் என்ன இருக்கிறது...?

நிகழினி : தனது தலையை மறுப்பதாய் அசைத்தவாறே) பெயரில் தான் எல்லாமே இருக்கிறது என்றும் நம்மால் சொல்ல முடியுமல்லவா! அது எப்படியோ, உன்னால் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்கவியலுமா என்ன?!

மணிமேகலை: ஹா, அது சாத்தியமில்லை. ஏன் கேட்கிறாய்?

நிகழினி : ( தனக்குத் தானே பேசிக் கொள்பவள் போல்) ஏனெனில், உலகெங்கும் ஏழைகள், வாழ்வின் அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாதவர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள்... எங்கள் நாட்டை எடுத்துக்கொண்டால், நாங்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கும், ஏவுகணைகளுக்கும், விண்கலங்களுக்கும் கோடிகோடியாகச் செலவழிக்கிறோம்... ஆனால், ஏழைகளுக்கு சுகாதார வசதியோடு கட்டப்பட்ட கழிப்பறைகள் கிடையாது.; சுத்தமான பொதுக் கழிப்பறைகள் கிடையாது. ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயான அகழி விரிவடைந்துகொண்டே போகிறது...( திடுமென நினைவுக்கு வந்ததுபோல்) இன்னுமொன்று... உன்னுடைய அந்த அற்புதப் பாண்டம் உணவு மட்டும் தான் கொடுக்கவியலுமா? அல்லது, வேறு பொருட்களையும் தரக்கூடியதா? ( தொலைவிலிருந்து துயரார்ந்த இசை ஒலிக்கிறது).

மணிமேகலை: உணவு மட்டும் தான். ஏன் கேட்கிறாய்..?

நிகழினி : காரணம், வேறு பல அடிப்ப்படைத் தேவைகள் கூட அநேகருக்கு இன்னும் கிடைத்தபாடில்லை... எடுத்துக்காட்டாக, மெய்யன்பு... நீயும், இளவரசன் உதயகுமாரனும் பிரிந்தது - அன்பு முகிழ்க்கும் தருணத்திலேயே, காதலின் ஆரம்பக் கட்டத்திலேயே பிரிந்துவிட்டது நல்லது தான்.

மணிமேகலை : ஹோ, இல்லை. அதன் வலி சமயங்களில் என்னைக் கொன்றுவிடுகிறது, தெரியுமா...( அவள் முகத்தில் வலியும், வேதனையும் மண்டுகிறது)

நிகழினி : நான் சொன்னதும் இதைத் தான். இந்த வலி வேதனை எல்லாம் நீங்கள் இருவரும் ஒன்றாக முடியாததால் தான்... எனவே, இருவரும் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகாமல் அப்படியே நிலைத்திருக்கும்... இறுக மூடிய உள்ளங்கை போல். அதனுள் இருப்பது என்ன என்பதைப் பற்றிய நமது எதிர்பார்ப்புகள், ஊகங்கள் எல்லாம் எப்போதும் உயிர்த்திருக்கும்... எனவே, ஏமாற்றத்திற்கு அங்கே இடமில்லை. மேலும், நீ இன்னமும் இளமைப்பொலிவோடும், செல்வச்செழிப்போடும் இருக்கிறாய். ஆம், அந்த தெய்வீகப் பாத்திரத்தைப் பெற்றிருக்கும் உனக்கு எந்தக் கோடீஸ்வரியும் இணையாக முடியாதே! உனது உடல், அதன் மர்மங்களும், ரகசியங்களும் அறியப்பட்டு, உன்னுடைய மேனியின் மறைகுறிப்புகள் பொருள்பெயர்க்கப்பட்டு, அதன் தோலின் நிறம் மங்கி, செழுமை வரண்டு சுருங்கி உன் உடலின் சாறுகள் ஒட்டுமொத்தமாய் உறிஞ்சிக்கொள்ளப்பட்ட பின், காலம் உன் உடலின் உச்சப்பகுதிகள் ஊடுருவப்பட்டு காலம் உன்னை முழுவதும் சக்கையாக்கிப் பிழிந்து போட்ட நிலையில் ஏற்படும் அளப்பரிய வலி வேதனை துக்கத்திலிருந்து உன்னை நீயே காத்துகொண்டுவிட்டாய்!

(மேடையில் எரியும் விளக்குகள் மெதுவே சாம்பல்பூத்ததாக, பின்னணியிசை ஒருவித ஒப்பாரியாக மாறுகிறது).

மணிமேகலை: அழுகிறாயா நிகழினி?

நிகழினி : நாம் எல்லோருமே, அவரவருக்கென்ற சில நேரங்களில் அழுகிறோம் தானே? ஒரு மனிதருக்கோ அல்லது ஒரு பண்டத்திற்கோ அல்ல... இழந்துவிட்ட ஒவ்வொரு கணத்திற்காகவும்... இழக்கப்போகும் ஒவ்வொரு கணத்திற்காகவும்... ஹோ, மறந்துவிட்டேன், உனக்கு சாப்பிடுவதற்கு ஏதேனும் கொண்டுவருகிறேன்... இவ்வலவு நேரம் ஏதேனும் சாப்பிட்டாயோ, இல்லையோ....சே, எத்தனை முட்டாள் நான்! உன்னிடம் அட்சயபாத்திரமே இருக்கிறது.. அதைமறந்துவிட்டு நான் கேட்கிறேன்...மேலும்...

மணிமேகலை: இல்லை, அதிலிருந்து எனக்கு உணவு எடுத்துக்கொள்ள முடியாது... மற்றவர்களுடைய பசியை போக்க மட்டுமே அந்தப் பாத்திரம்...

நிகழினி : அப்படியா! இந்தமாதிரியான செயல்நுட்பம் ஏதேனும் நம்முடைய சுயநலம் மிக்க, பேராசை பிடித்த ஆட்சியாளர்களைக் கண்காணிக்கவும், அவர்களுடைய அக்கிரமங்களைத் தடுத்துநிறுத்தவும் புழக்கத்தில் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும்!


(இருவரும் மனமார, வாய்விட்டுச் சிரித்தவாறே சமையலறைக்குச் செல்கின்றனர்.



திரை


*(மொத்தம் ஐந்து காட்சிகளைக் கொண்டது இந்நாடகம்)

Comments

  1. I want to know the meaning of name nigazhini

    ReplyDelete
    Replies
    1. நிகழினி = நிகழ்பவை அனைத்தும் இனிமையாக நிகழும் .
      மற்றும் இந்த பெயர் ஒரு பாண்டிய மன்னன் அவர் மகளுக்கு, தமிழ் மேல் உள்ள பற்றினால் நிகழினி என்று பெயர் வைத்தார்.
      அந்த இளவரசியின் பெயரும்,மன்னனின் பெயரும், முழு வரலாறும் நாங்கள் கண்டுபிடிக்கப்பட்ட( மதுரையில்) ஓலை சுவடியில் இல்லை..
      இப்போது அந்த ஓலை சுவடி அரசாங்க தமிழ்பழங்களஞ்சியத்தில் உள்ளது..

      Delete
    2. நிகழினி name is correct ,this is true name of pandiyan daughter`s

      Delete
  2. நிகழினி name is correct ,this is true name of pandiyan daughter`s

    ReplyDelete

Post a Comment